Ad Code

Side Effects of not Drinking Enough Water:தினமும் குறைவான தண்ணீர் பருகுபவரா நீங்கள்...இந்த விஷயத்தை எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

உடலின் இயல்பான செயல்பாடுகளை சீராக நடத்துவதற்கு தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும், நச்சுப்பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. ஆனால் தண்ணீரை குறைவாகக் குடிப்பது உடல் நீர்ச்சத்துக்குறை (Dehydration) ஏற்படச் செய்து, சிறுநீரகம், மூளை, தோல், செரிமானம் உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கக் கூடும். நீண்டகாலமாக தண்ணீர் குறைவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல், உடலின் சக்தியையும், தோற்றத்தையும் பாதிக்கும் ஆபத்தை உருவாக்கும்.



தண்ணீர் நம்முடைய வாழ்வின் அடிப்படை சக்தி என்று பலர் கூறுவார்கள். உணவை சில நாட்கள் தவிர்த்து வாழ முடிந்தாலும், தண்ணீரின்றி சில நாட்களும் கடப்பது கடினம். ஆனால், நம்மில் பலர் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை புறக்கணிக்கிறோம். இதன் விளைவாக, நம் உடலின் இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.

 தினசரி தண்ணீர் குடிக்கும் அளவு:


  • குழந்தைகள்: வயதைப் பொறுத்து 1 – 1.5 லிட்டர்
  • இளம், நடுத்தரப் பெண்கள் மற்றும் ஆண்கள் : 3 – 3.5 லிட்டர்
  • பெரியவர்கள்: 2.5 – 3 லிட்டர் (சூடான காலநிலையில்(Summertime) அதிகரிக்கலாம்)

தண்ணீர் குறைவால் ஏற்படும் முக்கியமான உடல் பாதிப்புகளை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

தோல் அழகு குறையும்:

தோலின் இளமைத் தன்மையும், பளபளப்பும் பெரும்பாலும் அதன் ஈரப்பதத்தினை சார்ந்தே இருக்கும். தண்ணீர் போதுமான அளவு பருகாமல் இருப்பதால், உடல் நீர்ச்சத்து குறைந்து, தோல் உலர்ச்சி, சுருக்கம், பிளவு போன்ற பிரச்சனைகள் உருவாகும். நீரின் பற்றாக்குறையால் இரத்த ஓட்டம் சரியாக நடைபெறாது. இதனால் தோலுக்கு தேவையான சத்துகள் மற்றும் ஆக்சிஜன் குறைவாக கிடைத்து, முகத்தில் சோர்வு மற்றும் மங்கலான நிறம் தென்படும்


தொடர்ந்து
நீர் குறைவாக எடுத்துக்கொண்டால், கொலாஜன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, முகம் கருமையாகவும் பொலிவு இழந்தும் காணப்படும். எனவே தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது, தோலின் அழகை காக்கும் எளிய, வழியாக கருதப்படுகிறது.

உடல் வெப்பநிலை கட்டுப்படுத்துவதில்  சிக்கல்:

போதுமான அளவு தண்ணீர் பருகும்போது, வியர்வை மூலம் உடல் சூடு வெளியேறி, உள் வெப்பநிலை சமநிலையில் இருக்கும். ஆனால் தண்ணீர் குறைவாகக் குடித்தால், வியர்வை உற்பத்தி குறைந்து, உடல் சூடு வெளியேற முடியாமல் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் உடல் சோர்வு, தலைசுற்றல், நீர்ச்சத்து குறைவு, சூடுபிடித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்



நீண்ட
நேரம் இந்நிலை நீடித்தால், உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தும் இயற்கை அமைப்பு பாதிக்கப்பட்டு,வெப்பமான சூழ்நிலையில் வேலை செய்பவர்களுக்கு அல்லது உடற்பயிற்சி செய்ப்பர்வர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு( Heat Stroke) தள்ளப்பட்டு விடும்.

 இளமையில் முதுமை:

உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல் போனால், தோல் தனது இயல்பான ஈரப்பதத்தை இழந்து உலர்ச்சி மற்றும் சுருக்கம் போன்ற முதுமை அறிகுறிகள் இளமையிலேயே தோன்றத் தொடங்கும். தண்ணீர் குறைவதால் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தி பாதிக்கப்படுவதால், தோலின் இயற்கையான தன்மை குறைந்து, முகத்தில் சோர்வு மற்றும் மங்கலான நிறம் வெளிப்படும்




மேலும், நீர் பற்றாக்குறையால் இரத்த ஓட்டம் மந்தமடைந்து, செல்களுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் ஆக்சிஜன் குறைவாக கிடைப்பது, தோல் செல்களின் மறுசீரமைப்பு வேகத்தை குறைக்கும். இதனால், இளமையான தோற்றம் விரைவாகக் குன்றி, முதுமை விரைவாக உருவாகும் அபாயம் அதிகரிக்கும்.

மூளை செயல்பாட்டில் பாதிப்பு:

மூளையின் சீரான செயல்பாட்டிற்கு தண்ணீர் மிக முக்கியமானது, ஏனெனில் நரம்பு செல்லுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடைபெற திரவ சமநிலை அவசியம். தண்ணீர் குறைவாகப் பருகும்போது, உடல் நீர்ச்சத்து குறைந்து, இரத்த ஓட்டம் மந்தமடைந்து, மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் சத்துகள் குறைவாக கிடைக்கும். இதனால் கவனம் செலுத்தும் திறன், நினைவாற்றல், மற்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கப்படும்



மேலும்
, நீர் பற்றாக்குறையால் மன அழுத்தம், தலைவலி, மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். நீண்ட நேரம் இந்நிலை நீடித்தால், மூளை செயல்பாடு மந்தமடைந்து, அன்றாட செயல்களில் குறைவான திறன் மற்றும் சோர்வு அதிகரிக்கும்.

செரிமான கோளாறு பிரச்சனை:

உடலில் தண்ணீர் குறையும்போது, உணவை மென்மையாகக் குழைத்து, குடலின் வழியாக நகர்த்தும் செயல் மெதுவாகி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். இதனால் உடலில் செரிமான முறையை பெரிதும் பாதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், நீர்ச்சத்து இல்லாமல் குடலின் உள்ளே உள்ள கழிவுகள் கெட்டியாகி, அவை வெளியேறுவதற்கு கூடுதல் சிரமம் ஏற்படும்




இது வயிற்று வலி, வீக்கம், அஜீரணம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தி, உணவின் சத்துகள் முழுமையாக உடலுக்கு செல்லாமல் தடுக்கும்.  செரிமான கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

நீரிழிவு மற்றும்  சிறுநீரக பாதிப்பு :

 தண்ணீர் குறைவாகப் பருகும்போது, உடலில் நீர்ச்சத்து குறைந்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இது நீரிழிவு நிலையை மேலும் மோசமாக்கலாம்.சிறுநீரகம் உடலில் தேங்கும் கழிவுப் பொருட்களையும், அதிக உப்பையும், நச்சுகளையும் வடிகட்டி வெளியேற்றும் முக்கிய உறுப்பாகும். போதுமான தண்ணீர் இல்லாதபோது, சிறுநீரகம் அதிக உழைப்புடன் செயல்பட வேண்டி, அதன் செயல்திறன் குறையலாம். இது நீண்டகாலத்தில் சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதிப்பு, அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்குக் காரணமாக முடியும்




மேலும், நீரிழப்பு (Dehydration) ஏற்பட்டு, இரத்த ஓட்டம் குறைவதால் சிறுநீரகத்திற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் போதிய அளவில் கிடைக்காமல், அதன் இயல்பான செயல்பாடு பாதிக்கப்படுகிறது. ஆகவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது நீரிழிவு நோய் ஏற்படாமல் இருப்பதற்கும், சிறுநீரகத்திற்கும் மிகவும் பாதுகாப்பான கவசமாக இருக்கும்.

கவனத்தில் கொள்ளுங்கள்:




  1. அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒன்று முதல் இரண்டு குவளை வெந்நீர் (Warm water) குடிக்க வேண்டும்.இது உடலில் இரவு முழுக்க தேங்கிய கழிவுகளை வெளியேற்றி, குடல் இயக்கத்தை தூண்டும்.
  2. உடல்பயிற்சி செய்யும் முன், நடுவில், மற்றும் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.வியர்வை மூலம் இழக்கும் உப்புச் சத்துகளையும் (Electrolytes) ஈடு செய்ய தேங்காய் நீர் குடிக்கலாம்.
  3. உணவுக்கு முன் ஒரு குவளை தண்ணீர் குடிப்பது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் பசி கட்டுப்பாட்டில் இருக்கும்.ஆனால், உணவு சாப்பிடும் நேரத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம்.
  4. உணவுக்குப் பிறகு உடனே தண்ணீர் குடிக்காமல், குறைந்தது 45–60 நிமிடம் காத்திருக்க வேண்டும்.
  5. பின்னர் ஒரு குவளை தண்ணீர் குடிப்பது, சத்துகள் உடலில் சரியாக செரிமானமாகவும் உறிஞ்சப்படவும் உதவும்.
  6. நாள் முழுவதும் இடைவெளி விட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் மிகவும் அவசியம்.இந்த பழக்கம்  உடல் நீர்மச் சமநிலையை (Hydration) நிலைநிறுத்தும்.
  7. படுக்கச் செல்லும் முன் சிறிதளவு தண்ணீர் குடிப்பது நல்லது, ஆனால் மிக அதிகமாக வேண்டாம். இல்லையெனில் இரவில் அடிக்கடி கழிவறைக்கு(Bathroom) செல்ல நேரிடும்.

நாம் இவ்வுலகில் உயிர் வாழ தண்ணீர் தேவை என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. அதனால் தண்ணீரை போதுமான அளவில் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை உங்கள் கைகளில் பாதுகாப்பது போன்றது. குறைவான தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நீங்கள் அறிந்து, அவற்றைத் தடுக்கும் சக்தி உங்களிடம் இருக்கிறது




தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தூரத்தில் வைக்க முடியும். “நான் என் உடலை நேசிக்கிறேன், அதனால் தண்ணீரை போதுமான அளவில் குடிப்பேன்என்ற மனப்பாங்குடன் செயல்பட்டால், நீங்களே உங்கள் ஆரோக்கியத்தின் காவலராக இருக்க முடியும்.

 

 

 

Post a Comment

0 Comments